மங்களம் அருளும் சிவபூரணி... சனிதோஷம் தீர்க்கும் அதிசய தலம்!
1400 ஆண்டுகள் பழமையான சோழபுரம் ஸ்ரீ சிவபூரணி சமேத கைலாசநாதர் கோயில், மாங்கல்யம், சனிதோஷ நிவர்த்தி மற்றும் சகல மங்களங்களையும் அருளும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
நமது சமய வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்து விட்ட இன்றியமையாத ஒரு சொல் 'மங்களம்'. நம்நாட்டு வாழ்வரசிகள் பெரு விருப்பத்துடன் இறைவனை சதா வேண்டுவதும் இந்த மங்களத் தன்மையினைத்தான்.
சகல விஷயங்களிலும் பூரணமான நிறைவினைப் பெற்ற செம்பொருளாகிய இறைத் தன்மையே 'சிவம்' ஆகும். சிவம் என்ற சொல்லுக்கும் மங்களம் என்றும் பொருள் உண்டு. சிவத்தில் சரிபாதியாக விளங்குகின்ற அம்மைக்கு 'சிவை என்பது பெயர். சர்வ மங்களத் தன்மை எப்பொழுதும் இல்லங்களில் நிறைந்திருக்க வேண்டும் என்பதனால்தான் பேச்சினிடையே கூட 'சிவசிவ' என்று இருமுறை அடுக்கிக் கூறும் வழமையை ஏற்படுத்தி வைத்தார்கள் பெரியவர்கள். 'சிவ சிவ' என்ற தொடரில் ஒன்று சிவத்தையும், பிறிதொன்று சக்தியையும் குறிக்கிறது என்பர். மங்களமாகிய சிவத் தன்மையைப் பூரணமாகப் பெற்று விளங்குவதால், அம்பிகையை சிவபூரணி என்றே சொல்கின்றன புராணங்கள். அதையே தனது திருப்பெயராகக்கொண்டு அம்பிகை அருள்பாலிக்கும் தலமே நாம் இப்போது தரிசிக்க இருப்பது.
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் சிறந்திருந்த பகுதிகளில் எல்லாம், சிவாலயங்களை எழுப்பி மேலும் சிறப்பித்தார்கள் மன்னர்கள். ஆகவே சோழர் ஆண்ட பகுதி முழுவதுமே காண்பதற்கரிய சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழும் கோயில்கள் கொண்ட ஊர்கள் பல உண்டு. அதேசமயம், காலப்போக்கில் பலரும் அறியாமல்போன ஆலயங்களும் உண்டு.
அந்தவகையில் சோழபுரம் எனும் ஊரில் புராண வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இரட்டைக் கோயில்கள் - இருக்கின்றன என்பது, பெரும்பாலானோர் அறியாத ஒன்று. முதலாவது கோயில், அஷ்ட பைரவர்களும் வழிபட்ட பைரவேஸ்வரர் ஆலயம். இரண்டாவது தலம், ஸ்ரீ சிவபூரணி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம். இந்தத் தலமே நாம் இப்போது காண இருப்பது.
சோழர் காலத்தில் மிகப் பிரமாண்டமாக விரிந்து பரந்திருந்த ஆலயம். எனினும் கோபுரம் ஏதும் இல்லாத நிலையிலேயே காட்சியளிக்கிறது. மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கி அருளும் அழகிய லிங்கத் திருமேனியர். தரிசிப்பவர் மனதில் மகிழ்ச்சியை அனுக்கிரஹிக்கின்ற தன்மை உடையவர். இதனால் இவர், மகிழ்ச்சிநாதர் என்றும் வழங்கப்பட்டிருக்கின்றார். பெண்கள் தமது மகிழ்ச்சி நிறைந்த வாழ்விற்காகவும்; மாங்கல்ய பலத்திற்காகவும் சந்தோஷிமாதாவை வழிபாடு செய்வது நாடுமுழுக்க வழக்கத்தில் இருக்கிறது. அந்த விரதம் தோன்றிட மூலகாரணமாக விளங்கிய தலம் இதுதான் என்கிறார்கள். பிற்காலத்தில் சந்தோஷிமாதா வழிபாடு, தெற்கே அருகிவிட்டது.
இத்தலத்து இறைவனுக்கு இணையான சக்தியாக விளங்கிடுபவள், ஸ்ரீ சம்பத் கெளரீ. சகலசம்பத்துகளுடன் சந்தோஷம் நிறைந்த வாழ்வினைத் தரவல்லவள் என்பதால், சிவபூரணி அம்மை. இவளை வணங்கினால், வாழ்வு சீராகும் சிறக்கும் என்பது பரி பூரணமான உண்மை என்கிறார்கள் பலனடைந்தவர்கள். சம்பத்கௌரீ விரதம் அல்லது சந்தோஷி மாதா விரதம் இருப்பவர்கள், அதனைப் பூர்த்தி செய்தபின்னர் இத்தலத்திற்கு வந்து வழிபட கூடுதல் பலன்கள் நிச்சயம் என்கிறார்கள்.. இக்கோயிலின் இன்னொரு சிறப்பு, சனிபகவான் இங்கே மங்கள சனைச்சரனாக இருப்பது. இவரை மார்த்தாண்ட சனைச்சரர் என்கின்றனர். (மார்த்தா முழுமை பெறாத; அண்டம் - முட்டை வடிவில் உள்ள இந்தப் பிரபஞ்சம்). முழுமை பெறாத அண்டத்திலிருந்து பேரொளியாகத் தோன்றி இருளை அகற்றிய சூரியனுக்கு மார்த்தாண்டன் என்பது பெயர். சூரிய புத்திரனாகிய சனி அவரது அம்சத்துடன் விளங்கிடுவதால் இப்பெயர் ஏற்பட்டது. வணங்குவோர் வாழ்வில் எல்லா மங்களங்களையும் நிறையச் செய்பவர் என்பதாலும் மங்கள சனைச்சரனாகப் போற்றப்படுகிறார்.
சூரியனுக்கும் சாயா தேவிக்கும் மகவாக உதித்த சனி பிறப்பிலேயே கருத்த நிறமுடையவர். கால்கள் பின்னமான காரணத்தினால் மந்தமாக நடப்பவர். அதனால் தேவர்களின் கேலிக்கு ஆளானார். இதனையடுத்து, தன் தாயாரின் அறிவுரைப்படி சனிபகவான், பைரவரை குருவாக சிந்தித்து கடும் தவத்தில் ஆழ்ந்தார். இறுதியில் மூன்று கண்களை உடைய திரயம்பகர் ஆகக் காட்சியளித்த சிவ பெருமானின் தரிசனத்துடன் மங்களத் தன்மைகளையும், நவகிரகங்களில் ஒருவராக விளங்கும் பதவியையும் பெற்றார். இப்புராணக்கதை நிகழ்ந்த புண்ணியத் தலம்தான் இது.
சனைச்சரர் பூஜித்த இறைவன், முக்கண்மாலீஸ்வரர் என்கிற திருநாமத்துடன் சுற்றாலையில் உள்ளார். இவருக்கு அருகிலேயே மார்த்தாண்ட சனைச்சரர் என்கிற மங்கள சனிபகவான் காட்சி தருகிறார். கரி நாள்கள் என்றால் ஆகாத நாட்கள் என ஒதுக்கி விடுவது பலரின் இயல்பு. ஆனால் கரிநாளையும் மங்களம் தங்கிடும் சுப நாளாக மாற்றவல்ல தலமிது என்பது ஐதிகம். கரிதினமும்சனிக்கிழமையும் சேர்ந்தமைவது கூடுதல் விசேஷம். அத்தகு தினங்களில் இங்கே வந்து மங்கள சனிபகவானுக்கு எள் சேர்த்து வெண்ணெய்க் காப்பு சாத்தி, எள் உருண்டைகளை நிவேதித்து, அடர்நீல நிற வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டால், சகல துன்பங்களும் நீங்கும் என்கின்றனர். ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, உடை தானம் செய்வது கூடுதல் விசேஷம்.
இப்படி வழிபடுவதன் மூலம், ஆயுள்கண்டம், சனிவாதனைகள் மற்றும் கிரகதோஷங்கள் முற்றிலும் அகல்வது கண்கூடு என்கின்றனர். குறிப்பாக பூச நட்சத்திரக்காரர்களுக்கான விசேஷ பரிகாரத் தலமாக இத்தலம் குறிப் பிடப்படுகிறது. வனவாசம் செய்த சமயத்தில் பஞ்ச பாண் டவர்கள் இங்கே தங்கி, இறைவனை வழிபட்டிருக் கிறார்கள். தங்களை வாட்டிய சனிதோஷங்கள் விலகுவதற்காக திரௌபதி நீலநிற வஸ்திரத்தினை அம்பிகைக்குச் சமர்ப்பித்து வணங்கினாளாம்.
சிவாலயத்திற்கு உரிய பரிவார மூர்த்திகள் கோஷ்டத்திலும் சுற்றாலையிலும் உள்ளனர். உயர்ந்த சந்நதிகளுடன் கூடிய மாடக்கோயில் போன்ற அமைப்பில் உள்ள இவ்வாலயம் சற்றேறக்குறைய 1400 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையானது. தொன்மையான வௌவால் நெற்றி அமைப்புடன் கூடிய சுற்று மண்டபம்.
மொட்டைக் கோபுரத்துடன் கூடிய ஆலயம். பெரும்பாலான சுற்றுப்பகுதிகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருப்பது வருந்தவைக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் ஒரு கால பூஜை திட்டக் கோயிலான இங்கேதான், மன்னர்கள் காலத்தில் பெரும் திருவிழாக்கள் நடந்திருக்கின்றன, ஆறுகால பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன என்றெல்லாம் நினைக்கும்போது, இன்றைய நிலை சற்று வருத்தப்படவே வைக்கிறது. இருப்பினும் இதுவும் ஈசனின் திருவுள்ளமே என்றும், உரிய காலத்தில் அவர் அருளாலே இது மீண்டும் சீரும் சிறப்பும் பெறும் என்ற எண்ணமும் எழுந்து நெகிழவைக்கிறது.
இத்தலத்தில் அஷ்டபைரவர்களும் சிவலிங்க பூஜை செய்துள்ளனர். அவர்கள் வழிபட்ட பைரவேஸ்வரி சமேத ஸ்ரீ பைரவேஸ்வரர் கோயில், இக்கோயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பைரவி ராகம் தோன்றிய தலம் இது என்பது அகத்தியர் வாக்கு. இங்குள்ள அஷ்ட பைரவர்கள் பூஜித்த எட்டு படிகளை அஷ்டமி தினங்களில் வழிபடுவது சிறப்பு. விபத்து, அகால மரணங்கள், நரம்புக் கோளாறுகள், செய்வினை முதலான பிரச்னைகளால் தொடர் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இங்கு வழிபட்டு பலன் அடைகின்றனராம். சோழர்களின் செழித்த கலைத்திறனுக்கு உதாரணமாகக் காட்சிதரும் இந்த ஆலயங்கள் அவசியம் காண வேண்டிய அதிசயங்கள். அதோடு, கடவுளின் அருள் நிறைந்து காலம்காலமாக பக்தி மணம் கமழும் திருத்தலங்கள்.
What's Your Reaction?