விஜயின் கரூர் பயணம்... திமுக மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடையில்லை என்று திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Jul 7, 2026 - 12:49
விஜயின் கரூர் பயணம்... திமுக மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும், அவர்களுக்கான அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கும், வருகின்ற ஜுலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூருக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் முதலமைச்சர் விஜய்  கரூருக்கு செல்வதால் நெரிசல் சம்பவம் தொடா்பான விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ, நிலுவையில் உள்ள விசாரணை குறித்தோ தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட எவரும் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடக்கோரியும், முதலமைச்சர் விஜய், கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதை எதிர்த்தும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முதல்வரின் பேச்சை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் வழக்கு வாதத்தின்போது, முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று திமுக வழக்குரைஞர் கூறியதற்கு உச்ச நீதிமன்றம்  கண்டனத்தை தெரிவித்ததோடு, கரூர் பலி வழக்கில், முதல்வர் விஜய் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவராக எங்கும் சேர்க்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? என்றும் திமுகவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

விசாரணையின் நிறைவாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை, முதல்வர் விஜய் நேரில் சந்திப்பதும், அவர்களது குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதும், வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் என்று குற்றம்சாட்டி திமுக சார்பில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுமாறு திமுகவிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.இல்லையெனில், அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow