மணி ஓசையால் வெளிப்பட்ட சுயம்பு சிவலிங்கம்... மணிகண்டீஸ்வரர் கோயிலின் அதிசயம்!

ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. அந்தக் கலையினை அருள்பவராக இறைவன் எழுந்தருளியுள்ள தலம், கீழமாத்தூர். திருஞானசம்பந்தப் பெருமான் கண்டறிந்து கூறிய அத்தலத்தில் இருந்தருளும் ஈசனின் திருப்பெயர், மணிகண்டீஸ்வரர்.

Jul 8, 2026 - 07:00
மணி ஓசையால் வெளிப்பட்ட சுயம்பு சிவலிங்கம்... மணிகண்டீஸ்வரர் கோயிலின் அதிசயம்!

இக்கோயிலுக்குள் பெரிய மணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இசைக் கலையைக் கற்க விரும்புவோர், முன்னதாக இந்தக் கோயிலுக்கும் வருகின்றனர். முறைப்படி இறைவனை வணங்கிய பிறகு இங்கே எழுப்பப்படும் மணி ஓசையினை, சில நிமிடம் கேட்கின்றனர். பின்னர் தகுந்த குருவிடம் சேர்ந்து இசையைக் கற்கத் தொடங்குகின்றனர். இப்படி இசையைக் கற்கத் தொடங்கினால், இசை ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. ஏற்கெனவே இசைத்துறையில் இருப்போர் இங்கே வந்து வழிபட்டால், மிகப்பெரிய வளர்ச்சியை அடையலாம் என்றும் சொல்கின்றனர்.

சுமார் ஆயிரத்து முன்னூறு வருடம் பழமையான கோயில் பலிபீடம், கொடிமரம் இல்லை! முன்மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் இறைவன் மணிகண்டேஸ்வரர், லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். இறைவி உமாமகேஸ்வரி தனி சன்னதியில் அருள்மணக்கத் திருக்காட்சியளிக்கிறாள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளில் மணிகண்டீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்புகள் பற்றி கதையாகச் சொல்லப்படுகிறது.
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அவர்கள் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. கலைஞானம் அளித்திடும் இத்தலத்தில் குருவாக அருளும் தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.
தலவரலாறு...

சமணர்களுக்கும் திருஞானசம்பந்தருக்கும் புனல் வாதம் நடை பெற்ற சமயம் அது. திருஞான சம்பந்தர், எல்லாம் வல்ல ஈசனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இறைவனைப் போற்றித் தாம் பாசுரங்கள் எழுதிய ஏடுகளை வைகை ஆற்றில் விட்டார். அவை நீரை எதிர்த்து எதிர்த் திசையில் ஓடின. அப்படிச் சென்றபோது, வழியில் ஓர் இடத்தில் பல்லாயிரக்கணக்கான மணிகள் ஒருசேர்ந்து ஒலிக்கும் ஓசை கேட்டது. என்ன ஏதென்று வியந்து எல்லோரும் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தனர்.

மன்னரும் அந்தப் பகுதிக்கு வந்தார். மணி ஓசை கேட்ட இடத்தில் பூமியைத் தோண்டினார்கள். அங்கே இருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அவ்வாறு எழுந்த சிவலிங்கம் அமையப்பெற்ற திருத்தலமே, இந்த மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.! அங்கு மணியோசை வெளிப்பட்ட இடத்தில் முதலில் தோண்டியபோது, மணல், வானுக்கும், பூமிக்கும் பறந்துள்ளது. இரண்டாம் முறை தோண்டியபோது, தண்ணீர் வெள்ளமாக ஊற்றெடுத்துள்ளது. மூன்றாம் முறை தோண்டியபோது சிவலிங்கத்தின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் வெளிப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.

பூமியிலிருந்து வெளிப்பட்ட சிவலிங்கத்தை வெளியே எடுக்க முயன்ற போது, எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. எனவே, ஈசன் இங்கேயே இருந்தருள்புரிய மனம்கொண்டுள்ளார் என்பதைப் புரிந்துகொண்ட சம்பந்த பெருமான், அதனை மன்னனிடம் தெரிவித்தார். அதையடுத்து, மன்னனின் ஆணைக்கிணங்க இங்கேயே  ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

சிவாலயங்களில் பொதுவாக லிங்கோத்பவருக்கு தனியாக சன்னதி இருப்பதில்லை. ஆனால் இங்கு லிங்கோத்பவர் சிறிய சன்னதியில் வீற்றிருக்கிறார்!
ஈசனின் திருமுடியைத் தேடி அன்னப் பறவையாக பிரம்மனும், ஈசனின் திருவடியைத் தேடும் வராஹமாக விஷ்ணுவும் இருக்க, இடையே லிங்கத் திருமேனியின் நடுவே அருவுருவினராக ஈசன் இருந்தருளும் திருக்கோலமே லிங்கோத்பவ வடிவம்.

இவ்வாலயத்திலும் அதே போன்ற அமைப்பு இருந்தாலும், லிங்கோத்பவரின் வலது புறம் பிரம்மாவும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் இருப்பது கூடுதல் சிறப்பு!
ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தர மாணிக்க பெருமாள், நவகிரகங்கள், கருடன், பைரவர், பிரம்மா, காசி விசாலாட்சி, அனுமன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகம், நடராஜர் சிவகாமி ஆகியோருக்கும் வெளிப்பிராகாரத்தில் தனிச்சன்னதிகள் உள்ளன. இத்தல இறைவனை, சூரியனும் சந்திரனும் வழிபட்டுள்ளனர். எனவே அவர்களுக்கும் இங்கே தனித்தனி சன்னதிகள் உள்ளன.

ஒவ்வொரு மாதமும் பௌணர்மி, பிரதோஷம், தேய்பிறை ,அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி மற்றும் மாத சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய தினங்கள் மற்றும் திருவிழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நடைபெறுகின்றன. பூஜைகள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோயில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. கலைஞானம் பெற்றிடவும், போட்டி பந்தயங்களில் வெற்றிபெறவும் அருளும் இத்தலத்து இறைவனை வேண்டிப் பலன்பெற்றோர் எண்ணிக்கை ஏராளம், ஏராளம் என்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow