விபத்தில் சிக்கியவரின் இரு சக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது

மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத காரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Dec 1, 2023 - 15:33
Dec 1, 2023 - 19:07
விபத்தில் சிக்கியவரின் இரு சக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது

மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கியவர்களின் இரு சக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே புஞ்சை கிராமத்தைச்சேர்ந்த திவாஸ், ரகுமான் ஆகியோர் கடந்த மாதம் தீபாவளி தினத்தன்று இரு சக்கர வாகனம் ஒன்றில் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர்.அப்போது கருவிழுந்தநாதபுரம் முக்கூட்டில் எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று எதிர்பாரதவிதமாக இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியிருக்கிறது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தற்போது அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் அவர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை உறவினர்கள் எடுக்கச்சென்ற போது அது காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அருவாப்பாடியைச்சேர்ந்த விக்னேஷ், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச்சேர்ந்த நவீன்குமார், உளுத்துக்குப்பை சோழசக்கரநல்லூரைச்சேர்ந்த அசோக் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தை திருடிச்செல்வது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மேற்படி மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் மீட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத காரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow