பெரியார் பல்கலை.யில் விடைத்தாள் வழங்குவதில் குளறுபடி- மாணவர்கள் அவதி என புகார்

எல்லாம் முறைப்படி தான் நடக்கிறது. சிலர் வேண்டுமென்றே எதையாவது சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.

Nov 29, 2023 - 16:19
Nov 29, 2023 - 16:56
பெரியார் பல்கலை.யில் விடைத்தாள் வழங்குவதில் குளறுபடி- மாணவர்கள் அவதி என புகார்

பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் உள்ளது பெரியார் பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் இணைவு பெற்று செயல்படுகின்றன.செமஸ்டர் விடைத்தாள் வழங்குவதில் குளறுபடி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பற்றி புகார் கூறும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பவித்ரன், 'சேலம் பெரியார் பல்கலை.யில் தேர்வு விடைத்தாள் கூட்டுறவு அச்சகத்தில் அச்சு அடிப்பது வழக்கம்.அவர்களிடம் இருந்து கமிஷன் பெற முடியாததால் சீலனாயக்கன்பட்டியில் உள்ள டெலி லிங்க் எல்லோ பேஜஸ் என்ற  தனியார் நிறுவனத்தில் விடைத்தாள் அச்சிடும் உரிமையை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.  

இதற்கு ஒப்பந்தம் வழங்க தொழில் நுட்பக்குழு ஒன்றை பல்கலைக்கழகம் ஏற்படுத்தி உள்ளது.அதன் அமைப்பாளராக தமிழ்த்துறைத் தலைவர்  உள்ளார். இவர் அந்த நிறுவனத்தில் இருந்து பெருமளவு கமிஷன் கேட்பதால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் அச்சடித்து கொடுக்க முடியவில்லையோ என்று நாங்கள் கருதுகிறோம். இதனால்  பல கல்லூரிகளுக்கு குறிபிட்ட நேரத்தில் விடைத்தாள் உரிய நேரத்தில் போய்ச்சேரவில்லை. இதன் காரணமாக சில தனியார் கல்லூரிகள் தங்கள் கல்லூரி மாணவர்களை அச்சகத்திற்கு அனுப்பியும், பல்கலைக்கழக அலுவலர் ரவி என்பவர் இரவு பகலாக அங்கு இருந்தும் பணி செய்து வருகின்றனர்.இது முழுக்க முழுக்க ரகசியம் காப்பதற்கு எதிரானது.

மேலும் பல்கலைக்கழக துறைகளில் தேர்வுக்கான விடைத்தாள் வராததால் மாணவர்களின் தேர்வு கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.அக்டோபர் நவம்பர் மாதங்களில் தேர்வு நடத்தி முடிக்க பட வேண்டும்.தேர்வு நடைபெறாததால் அடுத்த பருவ வகுப்புகள் வரும் டிசம்பர் 4 முதல் துவங்குகிறது.

தேர்வுகளை பின்னர் நடத்தி கொள்ளலாம். திங்கள்கிழமை நடைபெற்ற துறைத்தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.தேர்வு நடைபெறாமல் அடுத்த பருவ வகுப்பு நடத்துவது என்பது விதிகளுக்கு முரணானது. மாணவர்களுக்கு குழப்பத்தை விளைவிக்கும். மேலும் தேர்வு எப்போது நடைபெறும் என்று இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இப்படி மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும்  பல்கலைக்கழக நிர்வாகம் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத்தாளை கூட்டுறவு அச்சகத்தில் அச்சடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றார்.

பல்கலைக்கழக பதிவாளரிடம் பேச முயற்சித்து முடியமால் போக, பொறுப்பு அதிகாரிகளிடம் பேசினோம். ' சில நிர்வாக தாமதம் என்றால் கூட குறை சொல்ல ரெடியாக ஒரு கும்பல் இருக்கிறது. தனியாரில் அச்சடிப்பது தவறு ஒன்றும் இல்லை.எல்லாம் முறைப்படி தான் நடக்கிறது. சிலர் வேண்டுமென்றே எதையாவது சொல்லி கொண்டே இருக்கிறார்கள். தேர்வு உரிய நேரத்தில் நடக்கும்.' என்றார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow