போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது வதந்தி - அமைச்சர் சிவசங்கர்
கிளாம்பாக்கத்தில் பயணிகளின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்
கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்து இயக்கப்படவில்லை என்பது சிலர் பரப்பும் வதந்தி என அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக சுப நிகழ்ச்சிகளுக்காக தென்மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமானோர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு குவிந்திருந்தனர். ஆனால் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நள்ளிரவில் ஏராளமான மக்கள் அங்குள்ள போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வார விடுமுறையில் கூட, அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேருந்துகளின் இயக்கம் மற்றும் பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்து இயக்கப்படவில்லை என்பது சிலர் பரப்பும் வதந்தி என்றார். மேலும் அவர் கூறுகையில், "கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயங்கின. அதே போல் தான் இங்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நேற்று பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 610 பேருந்துகள் இயக்கப்பட்டது" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கத்தில் பயணிகளின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்று தெரிவித்தார். புதிய ஆம்னி பேருந்துகள் நிறுத்த வளாகம் ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அப்போது அவர் விளக்கம் அளித்தார்.
What's Your Reaction?