குமரி: மோசமான நிலையில் விருது பெற்ற அரசு மருத்துவமனை

இது சம்பந்தமான காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகின்றனர்.

Dec 1, 2023 - 17:12
Dec 1, 2023 - 19:16
குமரி: மோசமான நிலையில்  விருது பெற்ற அரசு மருத்துவமனை

கன்னியாகுமரியில் சிறந்த மருத்துவமனை விருதை பெற்ற மருத்துவமனை கட்டிடம் மோசமான நிலையில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட இடைக்கோடு பகுதி தமிழக கேரள எல்லை மற்றும் மலையோர பகுதியை சார்ந்து உள்ளது.இந்த பகுதியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி ஏராளமான நோயாளிகள் வந்து மருந்துகள் வாங்கி சென்றும் உள்நோயாளியாக இருந்தும் பயனடைந்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் தினசரி பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும். இதற்காக வேண்டி கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த மருத்துவமனைக்கான விருதையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்படும் கட்டிட மேற்கூரை முழுவதும் விரிசல் ஏற்பட்டு உள்ளதோடு உட்கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.

அதோடு மட்டுமல்லாமல் மழைநீரால் நனைந்த சுவர்களில் மின்சாரம் பாய்ந்து நோயாளிகளுக்கு உயிர்சேதம் ஏற்படும் அவலநிலை காணப்படுகிறது.அதோடு மட்டுமல்லாமல் கழிவறைகளின் மேலிருந்து எந்நேரமும் துளித்துளியாக  தண்ணீர் வடிவதால் கழிவறைகளை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல போதுமான வசதிகள் இல்லாததாலும், தூரம் அதிகமானதாலும் மலையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த மருத்துவமனையையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக தற்போது வரை மாவட்ட அளவில் அதிகம் பிரசவம் நடக்கும் மருத்துவமனையாக இந்த மருத்துவமனை விளங்கி வருகிறது. கடந்த மாதம் மட்டும் 41 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதமாக குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக இந்த மருத்துவமனையில் மழைநீர் உள்ளே புகுவதால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு இது சம்பந்தமான காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகின்றனர்.

மாவட்டம் நிர்வாகம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு கர்ப்பிணி பெண்களின் நலனில் அக்கறை கொண்டு அதிநவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow