அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு ஐகோர்ட்டில் வழக்கு

மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Nov 25, 2023 - 11:42
Nov 25, 2023 - 12:00
அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு ஐகோர்ட்டில் வழக்கு

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசுத்தரப்பிலும், ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
 தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக  பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைதொடர்ந்து சட்டவிரோத பணபரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில்  சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனையை தொடர்ந்து   10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. 

இந்த சம்மனை தொடர்ந்து  நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.இந்த பின்னணியில்  மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்ட  ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அங்கு நடவடிக்கை எடுக்காமல்,தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அமலாக்க துறை செயல்படுவதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரவரம்பு இல்லை  என்றும் கூறப்பட்டிருக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, அதிகார பரவலை மீறும் வகையில்,  மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக மாநில அரசே விசாரித்து வரும் நிலையில், 
மாநில அரசு, புலன் விசாரணை அமைப்புகள் கோரிக்கை விதித்திருந்தாலோ, நீதிமனறம் உத்தரவிட்டிருந்தாலோ மட்டும் தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய ஆளுங்கட்சி, ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையினரின் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், குறிப்பிட்டு குவாரிகளின் விவரங்களை மட்டும் கோராமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளின் விவரங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, சாட்சியாக சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் முறையிட்டார்.இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை திங்கள் கிழமை (நவம்பர் 27) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow