டாஸ்மாக் கடை மூடல் - இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாட்டம்

மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு, பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

Nov 20, 2023 - 14:45
Nov 20, 2023 - 18:45
டாஸ்மாக் கடை மூடல் - இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாட்டம்


பாப்பிரெட்டிப்பட்டியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதையடுத்து பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும், பாட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் பொம்மிடி மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடை அருகே கல்வி நிறுவனங்கள்,வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வணிக நிறுவனங்கள்  உள்ளன.

இந்த டாஸ்மாக் கடைக்கு  பாப்பிரெட்டிப்பட்டி மட்டுமல்லாமல் பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து குடிமகன்கள் வருகை தந்தனர். அவர்கள்  வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குச் செல்லும் வழியில் அமர்ந்து குடிப்பதோடு பெண்களை அச்சுறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தனர். இதனால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மக்களுக்கும், குடிமகன்களுக்கும்  தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனை அடுத்து அங்கிருந்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக  போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து,  அந்த டாஸ்மாக் கடை (2868) பாப்பிரெட்டி பட்டியில் இன்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது.இதனால், அப்பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்க தலைவர் தென்னரசு, செயலாளர் தொல்காப்பியன், பொருளாளர் ராஜாமணி குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர்  மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு, பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர் .

டாஸ்மாக் கடை இல்லாத நகரமாக பாப்பிரெட்டிப்பட்டி மாறியது. இதனையடுத்து இந்தக் கடை தென்கரைக்கோட்டைக்கு  மாற்றப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கடை அமைக்க தென்கரைக்கோட்டை பகுதியில் இடம் தேர்வு செய்த போது அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது அவர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று 12 மணியளவில் காவல்துறை உதவியுடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

-பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow