முதல்வரின் புது திட்டம் கனிமொழி நிகழ்ச்சியின் காப்பியா ?

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மக்கள் மத்தியில் மக்கள் களம் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Nov 24, 2023 - 15:16
Nov 24, 2023 - 16:01
முதல்வரின் புது திட்டம் கனிமொழி   நிகழ்ச்சியின் காப்பியா ?

"மக்கள் களம்" என்கிற நிகழ்ச்சி மூலம் கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்கிற புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்.இது கனிமொழியின் மக்கள் களம் நிகழ்ச்சியை போலவே இருக்கிறது என்பதால் கனிமொழியை காப்பியடித்தாரா முதலமைச்சர் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தேர்தல் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கிறது. 400க்கும் அதிகமான சீட்டுகளை வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய புதிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார்.

பாஜகவை தோற்கடித்து மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக கூடாது என்பதில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன.அதற்காக இந்தியா முழுக்க உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்கிற பெயரில் கூட்டணி அமைத்து களம் காண இருக்கிறார்கள்.

ஏற்கனவே எம்பியாக இருக்கிறவர்கள் மீண்டும் தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ளவும் கட்சிகளில் சீட்டை வாங்கி விடவும் மக்களை சந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஆன கனிமொழி, மக்கள் களம் என்கிற நிகழ்ச்சி மூலம் கிராம மக்களை சந்தித்து வருகிறார்.

கிராமங்களுக்கு நேரடியாக செல்லும் அவர் மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கிறார். மக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெற்றுக் கொள்கிறார். அங்கேயே சிலருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் இதற்காக கடுமையாக பாடுபட்டு வருகிறார்கள்.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மக்கள் மத்தியில் மக்கள் களம் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில்தான் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்கிற புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். இந்தத்  திட்டத்தின் படி மாவட்ட கலெக்டர்கள் மாதத்திற்கு ஒரு நாள் நேரடியாக கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும். அப்போது கலெக்டர்கள் கிராமங்களில் தங்கியிருந்து மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

இது திமுக எம்பி கனிமொழி நடத்தும் மக்கள் களம் நிகழ்ச்சியை போலவே இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர். இது குறித்து இங்குள்ள திமுகவினரிடம் பேசினோம் "மக்கள் களம் நிகழ்ச்சியின் மூலம் கனிமொழி எம்பி மக்களை சந்தித்து வருகிறார். இது கிராமப்புற மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளோ, தேர்தல் வரப்போகிறது எனவே மக்களை ஏமாற்ற மக்கள் களம் என்கிற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார் கனிமொழி என்று விமர்சனம் செய்கிறார்கள்.

அதே நேரம் தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்கிற திட்டம் கனிமொழியின் மக்கள் களம் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்திருக்கிறது. மக்கள் களம் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லையென்றால் முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்திருப்பாரா என்று எதிர்க்கட்சியினரை பார்த்து கேள்வி கேட்கிறார்கள் உடன்பிறப்புகள்.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow