காதல் முறிவு: கல்லூரி மாணவியை கழுத்தறுத்துக்கொன்ற கொடூரம்

'இறுதியாக உன்னிடம் ஒரு முறை பேச வேண்டும். இனி தொந்தரவு செய்ய மாட்டேன்' வா என்று அழைத்துள்ளார்.

Nov 18, 2023 - 16:41
Nov 18, 2023 - 17:53
காதல் முறிவு: கல்லூரி மாணவியை கழுத்தறுத்துக்கொன்ற கொடூரம்

காதலை முறித்து கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கல்லுாரி மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற முன்னாள் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகா காவலகெரே கிராமத்தை சேர்ந்தவர் சுசித்ரா. ஹாசன் அருகே மொசலே ஒசஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.இ., படித்து வந்தார். சுசித்ராவும், அவரது கல்லுாரி சீனியரான தேஜஸ் என்பவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சுசித்ரா காதலை முறித்து கொண்டார். ஆனாலும் காதலிக்கும்படி, தேஜஸ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுசித்ராவிடம் மொபைல் போனில் பேசிய தேஜஸ், 'இறுதியாக உன்னிடம் ஒரு முறை பேச வேண்டும். இனி தொந்தரவு செய்ய மாட்டேன்' வா என்று அழைத்துள்ளார்.இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.இதையடுத்து தேஜஸ், சுசித்ராவை ஹாசன் அருகே, குந்திகுட்டா மலைக்கு பைக்கில் அழைத்து சென்றார்.

அங்கு வைத்து காதலை முறித்து கொண்டது பற்றி கேட்டு, சுசித்ராவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சுசித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தவெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில்,ஹாசன் ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சுசித்ரா உடலை மீட்டனர். பின்னர் தலைமறைவான தேஜசையும் சுசித்ராவின் செல்போன் உதவியுடன் கைது செய்தனர். விசாரணையில் மேற்கண்ட தகவலை தெரிவித்ததையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி தேஜசை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காதலிக்க மறுத்த காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-பொய்கை கோ.கிருஷ்ணா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow