MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் சிறையிலடைப்பு

Feb 11, 2024 - 10:56
MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் சிறையிலடைப்பு

MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டார். 

கோவையில் இயங்கி வந்த MYV3 Ads ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 360 ரூபாய் முதல் ரூ.1.20 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்று ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்கள் தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்தை போலீசார் விசாரித்தனர். அப்போது, அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த MyV3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த், தங்கள் நிறுவனத்தின் மீது சிலர் வீண் பழி போட முயல்வதாக குற்றம்சாட்டி, ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து காவல்துறையினர் பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால், சக்தி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சக்தி ஆனந்த் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து சக்தி ஆனந்த் இரவோடு இரவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow