”நாடகக் காதலால் பாதிக்கப்படுவோருக்கு ஒரு அமைப்பு தேவை..” – மோகன் ஜி வலியுறுத்தல்.!
நாடக்க் காதலால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்காக ஒரு அமைப்பு தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி திவ்யதர்ஷினியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர் காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் திவ்யதர்ஷினி, ஆட்டோ ஓட்டுநர் பெருமாளை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் ஏலகிரி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். மகளை சமாதானப்படுத்த முயன்ற பெற்றோர் போலீசார் முன்னிலையில் காலில் விழுந்து கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தமிழகம் முழுக்க நாடக காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு சட்டரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உடன் நிற்பதற்கும், உதவுவதற்கு ஒரு அமைப்பு தேவை என பலர் என்னுடன் தொலைபேசியில் கோரிக்கை வைக்கிறார்கள்.. எதிர் தரப்பில் குறைந்தது 20 வழக்கறிஞர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் உடனடியாக ஒன்று கூடுகிறார்கள் எனவும் அவர்களை எதிர்த்து இந்த அமைப்பு களத்தில் நிற்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.. இதற்கு என்ன வழி.. இந்த பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட வழக்கறிஞர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்க முடியாதா.. இல்லை எதாவது ஒரு அமைப்பு தயார் என்றால் ஒரு press meet வைத்து உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. பாவப்பட்ட இந்த பெற்றோர்களுக்கு வழி காட்டுங்கள்..” என்று மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம், கலப்பு திருமணம் செய்துக் கொள்வோர்களை நாடகக் காதல் என்று கூறி, மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் இயக்குநர் மோகன் ஜி மீது இருக்கும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
What's Your Reaction?