தமிழகத்தில் அடிக்கடி மின்தடையா? இனி Permanent Solution... EB-யின் புதிய RTEP திட்டம்!

தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, RTEP என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு மின்வாரியம் அமல்படுத்த உள்ளது.

Jul 8, 2026 - 13:13
தமிழகத்தில் அடிக்கடி மின்தடையா? இனி Permanent Solution... EB-யின் புதிய RTEP திட்டம்!

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே மின்தடை என்பது அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இரவில் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்நிலை மாற்றவதற்காக தமிழகம் முழுவதும் நிலையான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடை  பிரச்னைகளை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் “Repeat Tripping Elimination Programme (RTEP)” என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துமாறு மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு தற்போது 3.5 கோடிக்கு அதிகமான மின் நுகர்வோருக்கு சேவை வழங்கி வருவதாகவும் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான துணை மின் நிலையங்கள் உயர் மின்னழுத்த மற்றும் தாழ்வு மின்னழுத்த மின் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீராக இருந்தாலும் சில குறிப்பிட்ட துணை மின் நிலையங்கள்,மின் பாதைகள், மற்றும் மின் உபகரணங்களில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பிரச்னைகளின்  மூலக் காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே  RTEP திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மின்தடை அடிக்கடி நிகழ்தல், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை, சேவை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு மின்தடை சம்பவத்திற்கும் ‘Root Cause Analysis’ எனப்படும் அறிவியல் அடிப்படையிலான காரண ஆய்வு மேற்கொள்ளப்படும். மின் மாற்றி கோளாறு, கேபிள் பழுது, பாதுகாப்பு அமைப்பு செயலிழப்பு, அதிக சுமை, விலங்குகள் அல்லது பறவைகள் காரணமான கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த திட்டத்தை கண்காணிக்க தலைமையகத்தில் மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அணி இணைந்து மாநிலம் முழுவதும் நிகழும் மின்தடை சம்பவங்களை ஆய்வு செய்து சிறந்த தொழில்நுட்ப நடைமுறைகளை பரிந்துரைக்கும் என்றும் புதிய துணை மின் நிலையங்கள், கூடுதல் மின் பாதைகள் திறன் மேம்பாடு, நெட்வொர்க்  தானியக்கம் உள்ளிட்ட நீண்டகால உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  

இதன் மூலம் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடை குறைந்து பொதுமக்களுக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரியம் உறுதியளித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow