சயனைடு தந்து இளம்பெண் கொலை- கோவில் பூசாரி செய்த கொடூரம்

Nov 18, 2023 - 14:22
Nov 18, 2023 - 17:32
சயனைடு தந்து இளம்பெண் கொலை- கோவில் பூசாரி செய்த கொடூரம்

குளிர்பானத்தில் சயனைடு கொடுத்து இளம்பெண் கொலை செய்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சேடப்பட்டி பகுதியில்  பெங்களூருவில் இருந்து வந்து  தங்கி கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர்  பசவராஜ். இங்கு செல்வி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தைபேறுக்காக கடந்த ஒரு ஆண்டாக செல்வி பல்வேறு இடங்களில் மருத்துவமும் மற்றும் சோதிடரீதியாக பரிகாரமும் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி செல்வி மாயமானார். தனது மனைவியை காணவில்லை என தாரமங்கலம் காவல் நிலையத்தில் கணவர் பசவராஜ் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே இளம்பிள்ளை அருகே திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் காட்டுப்பகுதியில் இளம்பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த பெண் தாரமங்கலம் பகுதியில் மாயமான செல்வி என்பது தெரியவந்தது. இளம்பெண் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்பொழுது செல்வின் உடலில் காயங்கள் எதுவுமில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளமும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வியை கொலை செய்தது அந்த பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி குமார் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது செல்விக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து உடலை இளம்பிள்ளை அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீசியது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கோவில் பூசாரியின் கூட்டாளி பவுன் என்பவனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

செல்விக்கும் பூசாரி குமாருக்கும் பழக்கம் இருந்ததா?  கொலை செய்ததற்கு என்ன காரணம் என்ன? போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒமலூர் டி.எஸ்.பி சங்கீதா இது பற்றிக் கூறும்போது 'குறிப்பிட்ட கோயிலுக்கு நான்கு ஆண்டாக செல்வி போய் வந்திருக்கிறார். கள்ளக்காதல் கொலையா? என்று விசாரித்து வருகிறோம்' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow