ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க!
பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்துப் பகுதிகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய தாவரம்.

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க!
- பருத்திச்சேரி ராஜா
’’ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது. பனைமரம் தண்ணீரை வற்றவிடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாக மாறி கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்…’’ - இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.
பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்துப் பகுதிகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய தாவரம். தமிழர்களின் கலாசார அடையாளமான விளங்கும் இந்த மரம். பனை புயலையும் தாங்கும் வல்லமைக் கொண்டது. இவ்வளவு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் பனை மரம் ‘கற்பகத்தரு’ என்று தமிழர்களால் பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் பனை மரம் அறிவிக்கப்பட்டது தமிழர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயமாகும்.
பொதுவாக மக்கள் பனைமரத்தை வறட்சித் தாவரம் என்றுதான் நினைக்கிறார்கள். அதில் ஓரள்வுக்கு உண்மை இருக்கிறது என்பதற்கேற்ப வறண்ட பகுதிகளில்தான் பனைமரம் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்தியாவில் 10.2 கோடி பனை மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி மரங்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தியாகும். இவற்றில் 2.5 கோடி மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம், சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகம்.
பனைமரத்தின் பயன்பாடு:
பதநீர், பனங்கற்கண்டு, கருப்பட்டி, பனங்கிழங்கு, நுங்கு, கள் போன்ற உணவுப்பொருட்களை வழங்குகிறது. வீடுகளுக்கு கூரை வேய்தல், ஓலைக் கூடைகள், ஓலை விசிறிகள், தொப்பி, குடை, குழந்தைகளுக்கு கிளுகிளுப்பைகள், பனங்கூடைகள், பனந்தட்டிகள், பனம்பாய்கள், பனந்தடுக்குகள், பனஞ்சாறு வடிகட்டும் கருவிகள் போன்ற வீட்டு பயன்பாட்டு மற்றும் கைவினைப் பொருட்களையும் கொடுக்கிறது. பனஞ்சாறு, பதனீர், பனங்கற்கண்டு, கருப்பட்டி, கள், நுங்கு, பனங்கிழங்கு போன்ற சுவையான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களும் பனை மரத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றன பண்டைய காலத் தில் ஓலைச்சுவடிகள் எழுத பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றும் பல கைவினைப் பொருட்கள் பனை ஓலைகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. பனையிலிருந்து கிடைக்கும் பதநீரைக் கொண்டு பதநீர் சோறு, பொங்கல் கொழுக்கட்டை, அவியல் சோறு போன்ற உணவுப் பண்டங்களை தயாரித்து உண்ணலாம்.
பனங்கள்ளும் பதநீரும்…
பனையின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் இன்னொரு அருமையான பொருள் பதநீர். பனை மரத்தில் உச்சியில் மண்பானையை கட்டி வைத்து, பனையின் (பனங்காய் உருவாவதற்கான முன்பான நிலை) பாளையை அறுத்து… அதில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பாலுக்கு ‘பனங்கள்ளு’ என்று பெயராகும். அந்தப் பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. ஒரு பனை மரத்தில் கிட்டத்தட்ட மூன்று மாத காலங்கள் வரை பனங்கல்லையோ, பதநீரையோ சேகரிக்க முடியும்.
விருப்பத்தின் அடிப்படையில்தான் பனங்கல்லை சேகரிக்க பனை மர உரிமையாளர்கள் பனங்கல்லை சேகரிக்கு அனுமதிப்பார்கள். பல இடங்களில் பனைமரத்தின் உச்சியில் கட்டும் பானையின் அடிபாகத்தில் சுண்ணாம்பை தடவி வைத்து விடுவார்கள். அந்தப் பானையில் சேகரிப்பதுதான் பதநீர் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் பனம்பழமும் உயிர் சத்து நிறைந்துள்ள அருமையான பனையின் பரிசாகும்.
தண்ணீரைவற்ற விடாது…
சுமார் 1,500 அடி ஆழம் வரை செல்லும் பனை நிலத்தடி நீரின் முக்கிய சேமிப்பாதாரமாகவும் விளங்குகிறது. பனை மரம் சேகரித்து வைக்கும் நீரின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும். பனைமரம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக சமீபத்தில் நடத்திய சில ஆய்வுகள் கூறுகின்றன.
நமது முன்னோர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். அதன் விளைவாக மக்கள் கூட்டம் கூட்டமாக வாழும் பகுதிகளில் குளங்களையும் கண்மாய்களையும் மற்றும் ஏரிகளையும் வெட்டினர். இப்படி குளம், ஏரி அல்லது கண்மாய்கலை வெட்டிய பிறகு, அவற்றில் நீர்மட்டம் உயர பனை மரம் உதவி செய்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டத்திற்கு உதவும் ஒரே தாவரம் பனை மட்டும்தான் என்பதை உணர்ந்த நமது முன்னோர்கள், நீர்நிலைகளின் அருகே பனை மரங்களை வளர்த்தனர்.
பொதுவாக எல்லா மரங்களுமே அதன் வேர்களை மண்ணுக்குள் பக்கவாட்டில் மட்டுமே பரப்பும். பனை மரம் மட்டும்தான் தனது வேர்களை பக்கவாட்டில் பரவவிடாமல் செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடிச் செல்லும். வேரை குழாய் போல மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டுவரும். இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருக்கும் நீரை மேலே கொண்டுவந்து விடும். இதன் மூலம் நிலத்தடி நீர் வழிப்பாதையில், நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கும். அதோடு மட்டுமில்லாமல் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது பனை மரங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்கு தமிழின் புதையல்களாக நாம் கொண்டாடும் சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்ற உலகப்பொதுமறை, ஐம்பெரும்காப்பியங்கள் உள்ளிட்ட தமிழின் பல இலக்கிய படைப்புகள் எல்லாம் நமது ஆதித் தமிழர்களால் பனையின் ஓலையில் எழுதி வைத்திருந்தவைதான்.
மருத்துவப் பயன்கள்
பனை மரத்தில் இருந்து மனிதர்களுக்குக் கிடைக்கும் நுங்கு… ஓர் அற்புதமான இயற்கைப் பரிசாகும். நுங்குவில் உள்ளே இருக்கும் நீர் வேர்குருவை போக்கும் ஆற்றல் கொண்டது. தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும். அடுத்து, பனைமரத்தின் நன்கொடை என்றே பனங்கற்கன்டை குறிப்பிடலாம். உடம்புக்கு, தாராளமாக குளிர்ச்சியை ஏற்படுத் தும் சக்தி பெற்றது பனங்கற்கண்டு. காய்ச்சிய பாலில் பனங்கற்கண்டு தூளைப் போட்டு மிதமான சூட்டில் அருந்தினால் உடல் குளிச்சி பெறும். தொண்டை வறட்சி நீங்கும். இருமல் மற்றும் சளித் தொல்லைகளு க்கு நல் மருந்தாகும். அதே போல் பனை மரம் தரும் இன்னோரு பொருள் பனங்கிழங்கு. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் தோல் சம்பந்தமான பிரச்னைகள் மட்டுப்படும். உடல் குளிர்ச்சியை தரும் தன்மையும் இந்தக் கிழங்கிற்கு உண்டு.
பதநீரை ஒரு மண்டலம் தொடர்ந்து அருந்தி வர மேக நோய் இருப்பவர்கள் அதிலிருந்து எளிதில் குணம்பெறலாம். பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண்கள் ஆறும்.
பனங்கொட்டையை ஈர மணலில் புதைத்து வைத்து, இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கிழங்கை மட்டும் வேக வைத்து உண்பது ஊட்ட சத்தாக அமையும். பனை மரத்தின் அடி பாகத்தை கொத்தினால், அப்பகுதியில் இருந்து கசியும் நீரை கடுமையான படை, தடிப்பு, தோல் ஊரல், சொறியின் மீது தொடர்து தடவி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் எளிதில் குணம் பெறும். பனைவெல்லமும், பனங்கற்கண்டும் வாதம், பித்தம் போன்றவற்றை நீக்கும். பசியைத் தூண்டும். சூடான பசும்பாலில் பனங்கற்கண்டு போட்டு குடித்துவர சளித்தொல்லை அகலும்.
மேலும், தொண்டைப்புண், தொண்டை வலி ஆகியவையும் நீங்கும். கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப் புண் போன்றவற்றிற்கு பங்கற்கண்டு நல்ல மருந்தாகும். ரத்த அழுத்தத்தையும் சீராக்கக் கூடியது. இதயம் சக்திபெறும். இதில் இருக்கும் கால்சியம் பற்களுக்கு வலு சேர்க்கும்.
இத்தகைய ஆற்றல் பெற்ற பனை மரத்தை கிராமப்புறங்களில் எல்லாம் சதிகாரர்கள் தங்களி சுயநலத்திற்காக வெட்டி வீழ்த்தி வருகின்றனர். பனை மரத்தை வெட்டுவதை சட்டப்படி தடுக்க முடியாதா? அரசாங்கம் எந்த வகையில் பனை மர வெட்டுதலை தடுக்கிறது? இதற்கென்று அரசின் விதிமுறைகள் இருக்கிறதா…. போன்ற உங்கள் கேள்விகளுக்கான தெளிவான விளக்கமான விடைகளைத் தெரிந்துகொள்ள…. ‘பனை மரத்தை பாதுகாப்போம்… நம் பாரம்பரியத்தை மீட்ப்போம்’ என்கிற கட்டுரையை படியுங்கள்.
பருத்திச்சேரி ராஜா
What's Your Reaction?






