திருமுருகாற்றுப் படை ஓர் எளிய அறிமுகம்: 1
திருமுருகாற்றுப்படை மிகவும் சக்திவாய்ந்த மந்திர நூல்.

திருமுருகாற்றுப் படை ஓர் எளிய அறிமுகம்:1
- அயப்பாக்கம் ப. ஜெயக்குமார்
நக்கீரர் சுவாமிகள் வாழ்ந்தது மதுரை மாநகர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் வாழ்ந்த வீடாக கருதப்படும் இடம் மதுரை மேல மாசி வீதியில் இருக்கிறது. நக்கீரர் கோயில் என அழைக்கப்பெற்றது, தற்காலத்தில் அந்தப் பெயர் மறுவி சங்கத்தார் கோயில் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. (ஆதாரம்: செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி, ஐந்தாம் படலம். பக்கம்.13)
மதுரை நகரத்துப் பெருமைகளை சொல்லப் புகுந்தால் தனி புத்தகமே பதிப்பிக்க வேண்டும். அருள்மிகு ரெங்கநாதப் பெருமான், அருள்மிகு மீனாட்சியம்மை, அவரது உறவான கள்ளழகர், பழமுதிர்ச்சோலை முருகப் பெருமான், திருப்பரங்குன்றத்து முருகர் என பட்டியல் நீண்டு செல்லும்.
’அழகர் ஆற்றில் இறங்குதல்’ மற்றும் ‘மீனாட்சி திருக்கல்யாணம்’ இரு நிகழ்வுகளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சைவ, வைணவ சமத்துவம் கொடிகடிப் பறக்கச் செய்வார்கள். இன்றும் இது மதுரை மாநகரின் தனிச்சிறப்பு ஆகும்.
காலத்தால் மாறுபட்ட பல நக்கீரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒளவையார் எனும் பெயரிலும் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள். நக்கீர தேவ நாயனார் என்பவர் பதினோராந் திருமுறையில் ஒன்பது நூல்களை இயற்றியுள்ளார். இறையனார் களவியலின் உரையாசிரியர் ஒரு நக்கீரர், இலக்கண நூல் ஆசிரியராக ஒரு நக்கீரர், ’நக்கீரர் நாலடி 400’ எனும் நூலை எழுதிய ஒரு நக்கீரர், அடிநூல் எழுதியதாக ஒரு நக்கீரர் என நிறைய நக்கீரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
திருமுருகாற்றுப்படை தோன்றிய இடம் திருப்பரங்குன்றம். பின்னர் திருச்செந்தூர், திருவாவினன்குடி(பழநி), சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை என ஆறு முக்கிய தலங்களைப் பற்றி எழுதப்பட்ட நூல். இந்நூலுக்குப் பின்பே முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு என்ற சம்பிரதாயம் தோன்றியிருக்க வேண்டும்.
ஆற்றுப்படை என்றால் என்ன?
தமிழில் இதுவொரு இலக்கண வகையாகும். பெரும் வள்ளல் ஒருவரிடம் சென்ற புலவர், அவரை வாழ்த்திப்பாடி, அவரிடம் இருந்து பொருள் பெறுகிறார். புலவர் மனம் குளிர்கிறது. குறைவின்றி கொடுத்த வள்ளலைப் போற்றி, மகிழ்ந்து எழுதுவார்கள். மேலும் வேறு புலவரைக் கண்டால், ’’இன்னாரை இந்த இடத்தில் சென்று கண்டேன், அவரிடம் இருந்து இவ்வளவு பொருள் பெற்றேன். அதுபோல் நீயும் சென்றால் உனக்கும் பொருள் கிடைக்கும்… சென்று பெற்றுக்கொள்’’ என வழிகாட்டுவதே ஆற்றுப்படுத்துதல் எனப்படும்.
புலவர் ஒருவர் வேறு ஒரு புலவருக்கு வழிகாட்டினால் அது புலவராற் றுப்படை, பாணர் எனில் பாணாற்றுப்படை, கூத்தர் எனில் கூத்தாற் றுப்படை. இவற்றில், திருமுருகாற்றுப்படை என்பது தனி வகைமையை சேர்ந்தது. நக்கீரர் சுவாமிகள் நேரடியாக முருகப்பெருமானைக் கண்டவர்கள். அவர் தன் தமிழால் அழைத்தபோதெல்லாம், முருகப்பெருமான் ஓடோடி வந்திருக் கின்றார். ஆகவே, தாம் கண்ட முருகப்பெருமானை நாம் காண வேண் டியே முருகாற்றுப்படை அருளினார்கள். முருகப்பெருமானை நாம் காண வேண்டியே முருகாற்றுப்படை அருளினார்கள். முருகப் பெரு மானை சென்றடைய ஆற்றுப்படுத்தினார். ‘திரு’ என்பது உயர்திணை அடைமொழியாகி திருமுருகாற்றுப்படை என்றானது. திருமுருகாற்றுப் படையின் இறுதியிலே பிற்கால சேர்க்கையாக பத்து வெண்பாக்கள் இருக்கின்றன. அதில் கடைசி வெண்பா மேற்கண்ட செய்தியினை உறுதி செய்கின்றது.
‘நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தக்கோல நாள்தோறும் சாற்றினால் – முக்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தாம் நினைத்த எல்லாம் தரும்’
திருமுருகாற்றுப்படை மிகவும் சக்திவாய்ந்த மந்திர நூல். இதுவொரு பாராயண நூல். செல்லாட, துல்லியமானது. இந்த நூலை பாராயணம் செய்து, இறைவன் முன் அமர்ந்து தினமும் சொல்லபட வேண்டிய நூல். கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், கந்த குரு கவசம், போன்றவை நமக்கு கவசமாக இருந்து காக்கக் கூடியவை. ஆனால், திருமுருகாற்றுப்படை என்பஹு ஆற்றல் மிக்க படையோடு வந்து நமது துன்பங்களை அழிக்கக்கூடிய நூல் இதுவாகும்.
‘ஆசையால், நெஞ்சே அணிமுருகாற்றுப்படையை
பூசையாய் கொண்டே புகல்’ என்கிறது இனியொரு வெண்பா. மிகவும் கடினமான வார்த்தைகளைக் கொண்ட, ஆசிரியப்பா வகை நூல். 317 வரிகளைக் கொண்டது. அவை, திருப்பரங்குன்றம் 77 வரிகள், திருச்செந்தூர் 48 வரிகள், பழநி 51 வரிகள். சுவாமிமலை 13 வரிகள், திருத்தணி 28 வரிகள், மற்றும் பழமுதிர்ச்சோலை 100 வரிகள் ஆகும். நிறைய சொற்களுக்கு நிகண்டுகளில் அர்த்தம் தேட வேண்டி யிருக் கும். எத்தனையோ பேர் உரை கண்டிருந்தாலும், எளிமையாக, தற்கால மொழிக்கு ஏற்ப ஐந்து வரிகளை எடுத்துக்கொண்டு எளிய விளக்கங்களோடு அதனை ரசிக்கலாமா?
அடுத்து நீங்கள் ஆசையோடு வாசிக்கக் காத்திருக்கும் அத்தியா யத்தில்… திருப்பரங்குன்றத்தின் 77 வரிகளை எடுத்துக்கொண்டு, அதற் கான விளக்கங்களை எளிமையாக நீங்கள் வாசித்து புரிந்துகொள்ளும் வகையில் பார்க்கலாம்… தொடரும்…
அயப்பாக்கம் ப. ஜெயக்குமார்
What's Your Reaction?






