ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! - 2ம் அத்தியாயம்
மக்களுக்கு அதிகளவில் பயன் தரும் மரமாக விளங்குகிற பனை மரங்களின் நிலைமை இன்றைக்கு எப்படி இருக்கிறது..

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! - 2ம் அத்தியாயம்
- பருத்திச்சேரி ராஜா
தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டதொடு, மக்களுக்கு அதிகளவில் பயன் தரும் மரமாக விளங்குகிற பனை மரங்களின் நிலைமை இன்றைக்கு எப்படி இருக்கிறது…. என்பது மக்களில் பலர் அறியாத செய்தி.
கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது தமிழ்நாட்டில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஆட்சியரின் அனுமதி பெறாமல் தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தை வெட்டுவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அறிவுப்பு வந்திருப்பதுகூட தமிழர்களில் பலருக்கு சென்று சேராததாகவே இருக்கிறது. ‘பனை மரத்தை வெட்டுனா என்ன? வெட்டாட்டி நமக்கென்ன…’ என்கிற மன நிலைதான் பல மனிதர்களுக்கு உள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டும்தான் பனைமரத்தை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்தின் அறிவிப்பை எவரும் செவிமடுத்ததாகவே தெரியவில்லை. தனிப்பட்ட நபர்களின் லாப நோக்கத்துக்காக தமிழகத்தில் ஆங்காங்கே வளர்ந்து நிற்கிற பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டுதான் வந்தன. பல கிராமங்களில் சாலை விரிவாக்கப் பணி என்கிற பெயரில் தொடர்ந்து பனை மரங்கள் பெரும் அளவில் வெட்டி சிதைக்கப்பட்டுதான் வருகிறது.
அண்மையில் பனை மரத்தை வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துதமிழக அரசின் வேளாண்துறை வெளியிட்டுள்ள அரசானை விவரம்: சட்டப்பேரவையில் கடந்த 2021 - 2022ம் ஆண்டு வேளாண் தனி நிதிநிலை அளிக்கையை அமைச்சர் தாக்கல் செய்யும்போது, ‘‘பனைமரத்தை வேரொடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தும் செயலைத் தடுக்கவும் அரசாங்கத்தால் உத்தரவு பிறப்பிக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்டுவதற்கு, மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாக்கப்படும்’’ என அறிவித்தார்.
தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அல்லது உதவி மாவட்ட ஆட்சியர், சார் மாவட்ட ஆட்சியர், வேளாண் உதவி இயக்குநர், காதிகிராம தொழில் வாரிய உதவி இயக்குநர், ஆகியோருடன் ஒரு குழு அமைக்கப்படும். மாவட்ட ஆட்சியர் வேறு உறுப்பினரையும் தேவைக்கேற்ப குழுவில் சேர்த்துக்கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தோட்டக் கலைத்துறை இயக்குநர் மாவட்ட ஆட்சியரிடம் பனைமரம் வெட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கு வதற்கான கருத்துருவை அரசுக்கு சமர்ப்பித்தார்.
அதில், தமிழகத்தில் கடந்த 2021 - 2022ம் ஆண்டு சுகாதாரத்துறை எடுத்த கணக்கின்படி 5 கோடி பனை மரஸங்கள் உள்ளன. இந்த மரங்களை வாழ்வாதாரமாகக் கொண்டு 3 லட்சம் விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.பனைப்பொருட்கள ஏற்றுமதி, பனைத் தொழிலில் அந்நிய செலவாணி வருவாய்க்கு வாய்ப்பளிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனை மரங்கள்... தமிழக அளவில் பெரிதும் குறைந்து வருவதை அரசு கவனத்தில் கொண்டு, பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 3 ஆண்டுகளாக பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
பனைமரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்தப் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கு வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைந்துள்ளது. இக்குழுக்கள் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனை மரத்தை தவிர்க்க முடியாத சூழலில் வெட்ட நேரிட்டால், மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். பனை மரம் வெட்ட அனுமதி வேண்டி, தனிநபர் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள். வேளாண் துறையின் உழவர் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட வாட்டார அலுவலர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை ஆய்வு செய்து பனைமரத்தை வெட்ட வேண்டிதன் அவசியம் குறித்து, மாவட்ட அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்க வெண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கெற்ப மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும்.
பனைமரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க,,, ஒரு பனை மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான குழுவானதும் மரத்தை வெட்டுவதற்கான முடிவை ஒரு மாதத்துக்குள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. மனுதாரரும் அனுமதி பெற்ற பின்னரே பனைமரத்தை வேட்ட வேண்டும். வெட்டும்போது ஆய்வு செய்ய குழு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். வெட்டபட்ட மரத்தின் பாகங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துசெல்லும்போது தோட்டக்கலைத் துறை இயக்குநரின் அனுமதிக் கடிதத்தை காட்ட வேண்டும். இவ்வாறு தமிழக அரசின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பருத்திச்சேரி ராஜா
What's Your Reaction?






