திராவிட மண்ணில் வேர் விடுமா விஜய்யின் கவர்ச்சி அரசியல்?
திராவிட கட்சிகளையும், தலைவர்களையும் போலவே விஜய்யும் தொடர்ந்து களமாடினால், மக்களின் கவனத்தை ஈர்க்கலாம்.

திராவிட மண்ணில் வேர் விடுமா விஜய்யின் கவர்ச்சி அரசியல்?
- இளையரவி
நடிகன் இனி நாடாள முடியாது? எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் நாட்டு அரசியலில் இது தவிர்க்க முடியாத கோஷம். கிட்டத்தட்ட யதார்த்தமும் அப்படித்தான்... தி.மு.க., அ.தி.மு.க. போட்ட குட்டிகள் தவிர்த்து தானே முளைத்த கட்சிகளில் பிழைத்துக் கிடக்கும் பிராந்திய கட்சிகள் இந்த நான்குதான். பா.ம.க., தே.மு.தி.க., வி.சி.க., நா.த.க. மற்றதெல்லாம் இ.எம்.ஐ.கட்ட முடியாமல் பூட்டிக்கிடக்கும் வீடுகள். இந்த நான்கில் நா.த.க. தவிர மற்ற மூன்று கட்சிகளும் கூட்டணி என்ற பெயரில் பிரதான இரண்டு திராவிட கட்சிகளை அண்டிப் பிழைக்கும் காளான்கள் தான்.
கருத்தியல் பேசும் நா.த.க., சாதி, மத, பண அரசியலில் பழந்தின்னு கொட்டை போட்ட திராவிட கட்சிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதால், கோட்டுக்கு அந்தப் பக்கம் எனக்கு இந்தப் பக்கம் உனக்கு என தமிழ் நாட்டை ஒப்பந்தம் போட்டு ஆண்டு கொண்டிருக்கிறார்கள தி.மு.க., அ.தி.மு.க.. இதில் எங்கே இருக்கிறது விஜய்க்கான இடம்?
ஆனாலும், இடைக்காலத்தில் ரஜினி கமல் காண்பித்த பூச்சாண்டியை எல்லாம் பூ வென உதறித்தள்ளிவிட்டு தமிழ்நாடு முழுக்க தண்டவாளம் மாதிரி படுத்து கிடக்கும் திராவிட கட்சிகளின் மீது தமிழக வெற்றி கழக ரயிலை சைலன்டா ஓட்டி, சுலபமா கோட்டைக்கு போய் விடலாம் என்று கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பினார் விஜய்.
முதலில் விக்கிரவாண்டி போனார், அப்புறம், மதுரை போனார், ரயில்லில் செம கூட்டம்... அந்த உற்சாகத்தில் கரூர் போனார், அரியலூர் விபத்து மாதிரி த.வெ.க. குப்புற கவுந்து விட்டது. இனி அந்த ரயில் ஓடுமா? எப்படி ஓட்டுவது? பைலட் விஜய் கூகுள் மேப் பார்த்து கோட்டைக்கு போய் சேர முடியுமா? இதற்கெல்லாம் சோளியை உருட்டி ஜோஸ்யம் பார்க்க முடியாது.
கடந்த 60 வருடங்களாக தமிழ்நாட்டு அரசியலின் சாபக்கேடு இங்கே கூட்டம் சேர்ப்பவன் தான் தலைவன் என்கிற சிந்தனை வேறூன்றி கிடப்பது. இது திராவிட அரசியல் உருவாக்கிய மாயை, போலித்தனம் தில்லாங்கடி வேலை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படியாவது அதிகாரத்தை பிடித்துவிட வேண்டும் என்று நினைக்கும் தனி நபர்களுக்கு, சிறு கூட்டத்திற்கு உடனடியாக பலனளிக்ககூடிய ஒரே வழி இதுதான். அதாவது திறப்பதற்கு எளிதான சுயநல அரசியலின் சொர்க்க வாசல்...
ஜனநாயக அரசியலில் மக்களை அரசியல்படுத்தாமல், ஆசைகாட்டி அவர்களின் உரிமையை ஆட்டய போட இதைவிட அற்புதமான வழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வழியில் விஜய்யும் தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்திருப்பதுதான் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல அவருக்கும் பேராபத்து.
இன்று 41 உயிர்கள், நாளை எட்டு கோடி தமிழர்களின் எதிர்காலம் இந்த கூட்டம் சேர்க்கும் விளம்பர அரசியலுக்கு பலியாகலாம். சரி, கூட்டம் சேர்ப்பவன் தான் தலவனா, இல்லை கூட்டம் சேர்ப்பவனெல்லாம் தலைவனா? இதை மக்கள் மட்டுமல்ல, கூட்டம் சேர்ப்பவர்களும் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டுல கூட்டம் சேர்க்கிறது ஒண்ணும் தலை போற சமாச்சாரமில்ல, தலையே போனாலும் செஞ்சே ஆக வேண்டிய விஷயமும் இல்ல... நாலே தெரு இருக்குற ஊர்ல நடு சந்தியில ஒரு காண்டா விளக்க வச்சிகிட்டு காடா துணிய ஏலம் விட்டாபோதும் அம்பது பேர் கூடுவான், அஞ்சு பேர் வாங்குவான்.
பத்து கடை இருக்குற தெருவுல ஒருத்தன் கொட்டடிச்சிகிட்டு குட்டிக்கரணம் போட்டால் போதும் நூறுபேர் கூடுவான். அதே நூறு பேர் பாம்புக்கும் கீரிக்கும் சாண்டை விடுறேன்னு சொன்னாலும் கூடுவான், கையில மையை தடவி, பையில இருக்கிற காசை வழிச்செடுத்தாலும் சொல்றவரை நகர மாட்டான்.
பஸ் ஸ்டாப் பக்கத்துல தார்ப்பாயை விரிச்சு கண்ணாடி பாட்டில்களை அடுக்கி வச்சு, கண்ணு முன்னால ஆண்மைக்குறைவுக்கு லேகியத்தை அறைச்சு தரேன்னு சொன்னால் அங்கேயும் கூடுவான். வாயு தொல்லைக்கு லேகியம்னு வாயால குசு விட்டு, காஸை அடுத்த செகண்ட் பிரிச்சுகாட்டறேன்ன்னு சவால் விட்டாலும் கூட்டமா கூடுவான். அதெல்லாம் கூட அதுவா சேரும் கூட்டம்.
ஆனால், இப்ப மெத்தப் படிச்சவனெல்லாம் குவார்ட்டரும் கோழி பிரியாணியும் குடுத்தால் தான் கூடுவான்... பாரதி கண்ட புரட்சி பெண்களுக்கு பிளாஸ்டிக் குடம், எவர்சில்வர் தாம்பாளம், முந்நூறு ரூபாய் போதும், அரசியலில் அவர்களும் ஒரு அங்கம்...
முன்பு கூட்டமாக கூடி ஏமாந்தார்கள், இப்போ ஏமாத்துறவனுக்காக கூட்டமா கூடுகிறார்கள். இந்த கூட்டம் நாட்டையே மாற்றுமா? இல்ல, இந்த கூட்டத்தை வச்சுகிட்டு நாட்டைத் தான் மாற்ற முடியுமா?
நம் வீட்டுக்கு தற்செயலாக நாலு பேர் அதிகமாக வருவதாக இருந்தாலே, உடனே பக்கத்து வீட்டில் சேர்களை இரவல் வாங்குவோம், தண்ணீர் குடிக்க சொம்பு டம்ளர் ரெடியாக இருக்கும். அறையின் காற்றோட்டம், வெளிச்சம், தூய்மை எல்லாமே கவனத்தில் கொள்ளப்படும். டாய்லட் கூட சுத்தம் செய்யப்படும். பொருளாதார நிலையை பொருத்து சிற்றுண்டி, தேநீர், குளிர்பானம் தயாராகும். அதற்கு பின்னர்தான் அவர்கள் வந்த விஷயமும் அதில் நமக்குள்ள ஈடுபாடும் சிந்தனைக்கு வரும்.
இதே மனநிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களை அணுகினால், இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும், மக்களின் ஈடுபாடும் அதிகரிக்கும். அத்துடன் தலைவர்கள் சொல்லும் கருத்துக்களும் காலத்துக்கும், கலாச்சாரத்திற்கும் பொருத்தமானதாக இருந்தால் கட்சிகளும் மக்களை எளிதாக சென்றடையும்.
இப்படி ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கும் எந்த ஒரு அரசியல் கட்சி கூட்டத்திலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதில்லை. இதை புரிந்து கொள்ளும் பொது புத்தி கூட இல்லாதவரா விஜய்? போகிற இடமெல்லாம் கூட்டத்தை பிரமாண்டமாக கூட்டி விட்டால் பிரளயம் நிகழ்ந்துவிடுமா என்ன? இது யாருக்கான கூட்டம், எதற்கான கூட்டம்? - பார்ப்பவர்கள் மனதில் இந்தக் கேள்விகள் எழாதா என்ன?
அரசியலுக்கு வருபவரெல்லாம் காரல் மார்க்ஸ், காந்தி, நெல்சன் மண்டேலாவாக இருக்க வேண்டும் என்பதில்லை. இருக்கின்ற அரசியல் கட்சிகள் மக்களிடம் எதை சொல்கிறது? மக்களுக்காக என்ன செய்கிறது? என்கிற மேலோட்டமான பார்வையாவது தலைவனுக்கு இருக்க வேண்டாமா?
1965களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தாமாக உயிர் நீத்தவர்கள் தவிர்த்து, திட்டமிட்டு தூண்டப்பட்ட கலவரத்தால் உயிர் பலியானவர்களின் எண்ணிக்கை அறுபதா, நூற்றி அறுபதா என இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை... ஆனால், அதை மக்கள் புரட்சியாக பொய் பிரச்சாரம் செய்து 1967இல் ஆட்சியை பிடித்தது தி.மு.க. அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸுக்கு அதை எதிர்கொள்ளத் தெரியவில்லை.
அன்று செடியாய் இருந்த திராவிட அரசியல் இன்று சீம கருவேல மரமாய் பரவிக்கிடக்கிறது. அன்று போல் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மேல் பலியான 41 உயிர்களின் பழியை சுலபமாக போட்டுவிட்டு, கோட்டையில் கொடியை பறக்க விட்டு விடலாம் என விஜய் நினைத்தால் அது கனவு தான்.
அன்று இந்தி பூந்து விடும் என்று சொன்னவர்கள், இப்போது பி.ஜே.பி. பூந்துடும்னு ஒரே உருட்டை பெயரை மட்டும் மாற்றி வெற்றிகரமாக உருட்டி வெற்றியும் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட கட்சிகள். இவர்களிடமெல்லாம் சாட்சி, மனசாட்சி என எதுவும் எடுபடாது. அதனால் மக்கள் மனதில் சத்தியத்தை விதைக்காமல் இந்த சாத்தான்களை விரட்ட முடியாது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
மாற்று அரசியல், மாற்றத்துக்கான அரசியல் என எந்த நிலைப்பாடும் இல்லாமல், வெறும் எதிர்ப்பு அரசியல், முதலமைச்சர் பதவிக்கான கனவு அரசியல் என காய் நகர்த்தும் விஜய்யால் இந்த சாத்தான்களை விரட்ட முடியுமா?
சத்தியமாக வாய்ப்பில்லை. ஏனென்றால் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் திராவிட அரசியல் என்று இந்த சுயநல அரசியலைத்தான் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கிறார்கள். முள்ளை முள்ளால் எடுக்கலாம், சாக்கடையை சாக்கடையால் சுத்தம் செய்ய முடியுமா?
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கீழ்த்தரமான சினிமா ரசனையையும், ஒழுக்கக்கேடான வன்முறை கலாச்சாரத்தையும் தன்னுடைய திரைப்படங்களின் மூலம் பரப்பி, இளைய சமுதாயத்தை சாக்கடையாக மாற்றி வைத்திருக்கும் விஜய் முதலில் தன்னையும் தன் ரசிகர்களையும் சுத்தப்படுத்தாமல் ஊரை சுத்தப்படுத்த கிளம்பினால் கரூர் சம்பவங்கள் தான் தொடரும்.
ஆபாச கலாச்சாரத்தை வியாபாரமாக செய்து விட்டு, இப்போது நான் பார்க்காத பணமா என்று ஏதோ கூலி வேலை செய்து சம்பாதித்தது போல் கூவவதெல்லாம் தலைமை பண்பல்ல, தலை (மை) க்கனமாகத் தான் இருக்க முடியும். அதாவது ‘தங்கத் தொட்டிலில் பிறந்தவன்தான் தலைவன், தன்னலமற்றவன்; தர்மாஸ்பத்திரியில் பிறந்தவன் பணத்துக்காக நாட்டை விற்பவன்’ என்ற பிகில் தத்துவத்தை தளபதி எங்கே கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை...
ழ்மையை குற்றத்தின் பிறப்பிடமாக பார்க்கலாம், ஆனால் பணம்தான் மேன்மை என்பதை அதற்குள் ஒளித்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?
அதிகாரத்தில் இருப்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்... அரசு தரும் சலுகைகளை தங்களின் கருணையாக ஒளிவட்டத்துடன் சொல்கிறார்கள். அதிகாரத்துக்கு வர நினைப்பவர்களும் மக்களுக்கு கருணைகாட்ட வரும் கடவுளாகவே தங்களை காட்டிக்கொள்கிறார்கள். எளிய மக்கள் இவர்களுக்கு இளிச்சவாயர்கள்.?
பிற கட்சி பேனர்களில் இருந்து தலைவர்களின் முகங்களை உருவி தன் கட்சி பேனரில் சொருகிக் கொண்டால் மட்டும் ஒருவர் மேதையாகி விடமுடியாது. தலைவன் என்பவன் வெறுமனே மேற்கோள் காட்டுபவனாக மட்டும் இருக்கக் கூடாது. தன் வாழ்க்கையில் மேற்கொண்ட ஒன்றை, அதனால் தான் அடைந்த மேன்மையை சொல்பவனாக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த மண்ணில் எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்கிற தெளிவு அவன் பேச்சிலும் பின் பற்றும் கொள்கையிலும் இருக்க வேண்டும்.
கடவுள் வேஷம் போட்டுக்கொண்டு பிச்சை எடுக்கலாம், ஆனால் மறைந்த தலைவர்களின் முகமூடியைப் போட்டுக் கொண்டு அதிகாரத்தை பிடிக்க நினைக்கக்கூடாது. மக்களிடம் காட்ட உங்களின் ஒரிஜினல் முகத்துக்கு பின்னால் ஒரு துளிகூட உண்மை இல்லையா? அல்லது அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் தத்துவங்கள் உங்களிடம் இல்லையா?
கேட்பதற்கு நாலு பேர் மட்டுமே இருந்தால் போதும், அவர்களுக்குள் நறுக்கென்று சென்று சேரும் கருத்துக்கள் தான் நாளை நாற்பதாயிரம் பேரை கட்சிக்குள் அழைத்து வரும். அதுவே லட்சமாகும், கோடியாகும். எதுவும் உடனே நிகழ வேண்டும் என்று நினைத்தால் சுயநலம்தான் அரசியலாகும். அதில் திராவிட அரசியல் எப்போதோ கரை கண்டுவிட்டது.
கருத்தரங்கம் நடத்துவதா கட்சிகளின் வேலை? தலைகலை குவித்து, வெற்றுக் கோஷங்களை எழுப்பி, மீடியாக்களுக்கு மாஸ் காட்டினாலே முதல்வர் நாற்காலியில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து விடலாம்... என்று இருக்கின்ற திராவிட கட்சிகளையும், தலைவர்களையும் போலவே விஜய்யும் தொடர்ந்து களமாடினால், மக்களின் கவனத்தை ஈர்க்கலாம், மனதை வெல்ல முடியாது. குறிப்பாக திராவிட அரசியலை கடுகளவுகூட அசைக்க முடியாது.
What's Your Reaction?






