இயக்குநர் மோகன்ஜி மீது அடுத்தடுத்து நடவடிக்கை - சம்மன் அனுப்ப போலீஸ் திட்டம்
இயக்குநர் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாகத் திரைப்பட இயக்குநர் மோகன்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கோயில்களுக்கு வழங்கப்படும் நெய்யின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பழனி கோவில் பஞ்சாமிர்த பிரசாதம் குறித்துக் கடந்த சில நாட்களாக அவதூறு பரப்புவதாகக் கூறி பழனி அடிவார காவல் நிலையத்தில் பாஜக பிரமுகர்கள் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வக்குமார் மீது கோவில் நிர்வாகம் புகார் அளிக்கப்பட்டது . இதில் செல்வகுமார் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது .
அதனைத்தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் பிரபல திரைப்பட இயக்குநர் மோகன்ஜி பழனி பஞ்சாமிர்தம் குறித்தும், அதில் ஆண்மைக் குறைவு, கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகவும் இது எனக்குக் கிடைத்த செவி வழி செய்தி என்றும், என்னிடம் ஆதாரம் இல்லை என யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பழனி கோவில் தேவஸ்தானம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இதேபோல் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இயக்குநர் மோகன்ஜி மீது தவறான தகவல்களைப் பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மோகன் ஜி நேற்று சென்னை காசிமேட்டில் உள்ள தனது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக இயக்குநர் மோகன் ஜி கைதுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






