மயிலாப்பூர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்த நபர் கைது

கோயில் வாசல் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை சென்னை பாரிமுனையில் போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்த நபர் கைது

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலில் கடந்த 7ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் மதுபோதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு எரித்தார். இதில் அதிஷ்டவசமாக கோவில் கதவு சேதம் அடையவில்லை. தொடர்ந்து அவர் கோயிலின் முன்பு பெட்ரோல் ஊற்றி எரித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையிலான போலீசார் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கோயில் அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் பழுதாகி இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வந்தனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாக தீனதயாளன் என்பவரை சென்னை பாரிமுனையில் போலீசார் கைது செய்தனர். கோயில் முன்பு ஏன் பெட்ரோல் ஊற்றி தீ பற்றி வைத்தார் என போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow