ரூ.10 லட்சம் அலுமினிய கம்பிகள் திருடிய மின்வாரிய ஊழியர்கள் சஸ்பெண்ட்

மூவரையும் பணியிடைநீக்கம் செய்து தமிழ்நாடு மின்வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.10 லட்சம் அலுமினிய கம்பிகள் திருடிய மின்வாரிய ஊழியர்கள் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை மின்வாரிய மத்திய பண்டகசாலையிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கம்பிகள் திருடப்பட்ட விவகாரத்தில் 3 மின்வாரிய ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் மின்வாரிய மத்திய பண்டகசாலையில் அலுமினிய மின் கம்பிகள் திருட்டு போயுள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார்.

மேலும் அந்த புகாரில் நாகை மத்திய பண்டகசாலையிலிருந்து மின்சாதன பொருட்களை பெற்று மயிலாடுதுறை மின்வாரிய பண்டகசாலைக்கு கொண்டு வந்து பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாகையில் பெறப்பட்ட அலுமினிய மின் கம்பிகள் மயிலாடுதுறை மின்வாரிய பண்டகசாலைக்கு கொண்டுவரப்படவில்லை.

இந்த மின்கம்பிகளை பெறுவதற்காக சென்ற மயிலாடுதுறை பண்டகசாலை மேலாளர் திருஞானசம்பந்தம், மத்திய பண்டக அலுவலர் சுந்தர்ராஜன், பண்டக காப்பாளர் இளங்கோவன், ஆகிய மூவரும் சேர்ந்து அலுமினிய கம்பிகளை நாகை மத்திய பண்டகசாலையிலிருந்து பெற்று அதை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான அலுமினிய மின் கம்பிகளை திருடியதாக மின்வாரிய அலுவலர்கள் திருஞானசம்பந்தம், சுந்தர்ராஜன், இளங்கோவன், ஆகிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் மேற்படி மூவரையும் பணியிடைநீக்கம் செய்து தமிழ்நாடு மின்வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow